நகைக்காக மூதாட்டி அடித்து கொலை வாலிபர் கைது


நகைக்காக மூதாட்டி அடித்து கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 3:45 AM IST (Updated: 3 Feb 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே நகைக்காக மூதாட்டியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செந்தாம்பாளையம் நத்தைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் தனிகாசலம். இவருடைய மனைவி லட்சுமி (வயது 80). இவர்களுடைய மகன்கள் குமாரசாமி, கந்தசாமி. இவர்கள் அனைவரும் ஒரே தோட்டத்தில் அருகருகே தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். லட்சுமி, இரவு நேரத்தில் ஆடு மாடுகளின் பாதுகாப்புக்காக தோட்டத்து வீட்டின் வெளியே வராண்டாவில் படுத்து தூங்குவது வழக்கம்.

சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் வாலிபர் ஒருவர் தோட்டத்திற்குள் புகுந்தார். பின்னர் அவர், வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சி செய்தார். இதனால் அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த வாலிபர் திடீரென்று இரும்புக்கம்பியால் லட்சுமியை தாக்கினார். உடனே வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டபடி லட்சுமி கீழே விழுந்தார்.

இரும்புக்கம்பியால் தாக்கினார்

அவரின் அலறல் சத்தம் கேட்டு லட்சுமியின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். இதை பார்த்த கந்தசாமியின் மகன் சுரேஷ்குமார் (20) அந்த வாலிபரை துரத்திச் சென்று மடக்கி பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சுரேஷ்குமாரையும் இரும்புக்கம்பியால் தலையில் பலமாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். வாலிபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த லட்சுமி, சுரேஷ்குமார் ஆகிய 2 பேரும் அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலுதவிக்கு பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் லட்சுமி பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவரது மகன் கண்ணன் (19) என்பதும், அவர், வீட்டின் வெளியே தூங்கிய மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்றதும், அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

Next Story