காரமடை அரங்கநாதர் கோவிலை முற்றுகையிட முயற்சி இந்து அமைப்பினர் 68 பேர் கைது


காரமடை அரங்கநாதர் கோவிலை முற்றுகையிட முயற்சி இந்து அமைப்பினர் 68 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 3:30 AM IST (Updated: 3 Feb 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அரங்கநாதர் கோவிலை முற்றுகையிட முயன்ற இந்து அமைப்பினர் 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரமடை,

கோவையை அடுத்த காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில் முன்பு நேற்று காலை 11 மணியளவில் இந்து அமைப்பினர் முற்று கையிட முயன்றனர். இதற்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் கே.டி.சிவபுகழ் தலைமை தாங்கினார். தாச பளஞ்சிக மகா ஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், பா.ஜ.க. நகர தலைவர் விக்னேஷ், இந்து முன்னணி நகர தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 68 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் கூறியதாவது:-

காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தானமாக வழங்கும் மாடுகளை அடிமாட்டிற்கு விற்பனை செய்யும் கோவில் செயல் அலுவலர் மற்றும் கணக்காளரை இடமாற்றம் செய்ய வேண்டும். அரங்கநாதர் கோவில் திருப்பணிகளை, உபயதாரர்களை கொண்டு மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கோவிலில் இருந்த பழமை வாய்ந்த கல் தூண்கள், யானை சிலைகள் திருட்டு போனது குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். நஞ்சுண்டேஷ்வரர் மற்றும் மாகாளியம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தாசபளஞ்சிக பஜனை சங்கத்தினரை கோவிலில் பஜனை பாட தடை செய்ததற்கு விளக்கம் அளிக்க தாமதிக்கும் நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து காரமடை வியாபாரிகள் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை அடைத்தனர். இதனால் பொதுமக்கள் அவதிப்பட் டனர்.
1 More update

Next Story