86 வயதிலும் இளமை.. புதுமை..

அலுவலக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்காமல் சுறுசுறுப்பாக தன்னை இயக்கிக்கொண்டிருக்கிறார், பைலாஹள்ளி ரகுநாத் ஜனார்த்தன்.
அலுவலக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்காமல் சுறுசுறுப்பாக தன்னை இயக்கிக்கொண்டிருக்கிறார், பைலாஹள்ளி ரகுநாத் ஜனார்த்தன். 86 வயதாகும் இவர் மாரத்தான் போட்டியாளர், சைக்கிள் பயண பிரியர், மலையேற்றம் மேற்கொள்பவர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னை பிசியாக வைத்துக்கொண்டிருக்கிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் ரெயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் பெரும்பாலானவர்களை போல ஓய்வுக்கு பிறகு வீட்டில்தான் பொழுதை போக்கிக்கொண்டிருந்தார். 64 வயதில் சைக்கிள் ஓட்ட பழகியவர் பின்பு உலகம் சுற்றும் சைக்கிள் பயண பிரியராகவே மாறிவிட்டார். கடந்த 22 ஆண்டுகளுக்குள் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறார். மாரத்தான் பந்தயங்களிலும் உற்சாகமாக பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். இமயமலைக்கு சாகச பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.
‘‘சைக்கிள் ஓட்டுவதை பொழுதுபோக்காக மட்டும் மேற்கொள்ளவில்லை. அதன் மூலம் இழந்த குழந்தை பருவத்தை மீட்டெடுக்க நினைத்தேன். 64 வயதில்தான் சைக்கிள் ஓட்டுவதற்கே பழகினேன். இதுவரை 4 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துவிட்டேன். இது கிட்டத்தட்ட பூமிக்கும், நிலவுக்கும் இடைப்பட்ட தூரம். உடல் அளவிலும், மன தளவிலும் வலிமை கொண்டிருந்ததால் 68 வயதில் மலையேற்றம் செய்ய தொடங்கினேன். 20 தடவை இமயமலைக்கு சென்று வந்திருக்கிறேன். கயிலாய மலைக்கும் சென்று திரும்பி யிருக்கிறேன். மனம்தான் உடல்நிலையை தீர்மானிக்கிறது. உடற்பயிற்சி மூலமும் என் உடல் வலிமையை தக்கவைத்துக்கொள்கிறேன். சத்தான உணவுவகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறேன்’’ என்கிற ஜனார்த்தன் தடகள வீரர்களை போலவே உணவு பழக்கங்களை கடைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
‘‘தினமும் பேரீச்சம் பழத்துடன் அன்றைய நாளை தொடங்குகிறேன். டீயோ, காபியோ பருகமாட்டேன். குடிநீரில் இருந்துதான் என் உடலுக்கு தேவையான அத்தனை சக்திகளும் கிடைக்கிறது. முளைகட்டிய தானியங்கள், முழுதானியங்களைத்தான் சாப்பிடுகிறேன். மாலை வேளையில் பழங்கள், பால் பருகுகிறேன்’’ என்கிறார்.
ஜனார்த்தன் மாடிப்படிக்கட்டுகளிலும் விறுவிறுவென்று ஏறி அசத்துகிறார். அது சார்ந்த போட்டிகளிலும் பங்கேற்று அடுக்குமாடி கட்டிட படிக்கட்டுகளில் ஏறி சில நிமிடங்களிலேயே மாடிப்பகுதிக்கு சென்றுவிடுகிறார். துபாயில் 64 தளங்களை கொண்ட கட்டிடத்தில் ஏறியும் அசத்தி இருக்கிறார். அதுபோல் 52 தளங்களை கொண்ட கட்டிட படிக்கட்டு களையும் மளமளவென கடந்திருக்கிறார். 32 தளங்களை கொண்ட கட்டிடங்களில் 4 முறை ஏறி இருக்கிறார்.
Related Tags :
Next Story






