வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை பறிப்பு: தலைமறைவான ரவுடி 30 ஆண்டுகளுக்கு பிறகு கைது


வீடு புகுந்து பெண்களை தாக்கி நகை பறிப்பு: தலைமறைவான ரவுடி 30 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 9:30 PM GMT (Updated: 3 Feb 2019 4:33 PM GMT)

வீடு புகுந்து தனியாக இருக்கும் பெண்களை தாக்கி நகை பறித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடி, 30 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரையை சேர்ந்தவர் வரதன் என்ற வரதராஜன் (வயது 52). ரவுடியான இவர், 1989-ம் ஆண்டுகளில் வளசரவாக்கத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வரதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வரதன், வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வரதனை, வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் சென்னை சென்டிரல், பல்லவன் சாலையில் வரதன் வசித்து வருவது தனிப்படை போலீசாருக்கு தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, 30 ஆண்டுகளுக்கு பிறகு ரவுடி வரதனை கைது செய்து விசாரித்தனர்.

தற்போது வரதன் ஆட்டோ ஓட்டி வந்து உள்ளார். இவர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 30 ஆண்டுகளில் வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா?. அவர் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா? என்ற கோணத்தில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story