மார்த்தாண்டம் அருகே வாடகை வீட்டில் விபசாரம்; 2 அழகிகள் உள்பட 6 பேர் கைது


மார்த்தாண்டம் அருகே வாடகை வீட்டில் விபசாரம்;  2 அழகிகள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-03T22:30:57+05:30)

மார்த்தாண்டம் அருகே வாடகை வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 அழகிகள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மருதக்காட்டுவிளையில் ஒரு வாடகை வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜமணி அந்த வீட்டை கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது, அந்த வீட்டுக்கு அழகிகள், வாடிக்கையாளர்கள் சென்று வருவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஆண்–பெண் போலீசார் திடீரென சென்று வீட்டை சுற்றி வளைத்தனர். அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே தப்பி செல்ல முடியாதபடி சூழ்ந்து கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 அழகிகள் உள்பட 6 பேர் சிக்கினர்.   

தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குலசேகரத்தை சேர்ந்த விபின் என்கிற கண்ணன் (வயது 34) அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதில் மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண்ணும், கொல்கத்தாவை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நேற்று வாடிக்கையாளராக சென்ற செம்மங்காலையை சேர்ந்த ராகுல் (34), மடிச்சலை சேர்ந்த விக்னேஷ் (27), குலசேகரத்தை சேர்ந்த செந்தில்குமார் (39) ஆகியோரும் போலீசில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 அழகிகள் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story