பவானிசாகர் அணை பகுதியில் சுற்றித்திரியும் மக்னா யானை கால்நடை மேய்ப்போர் கவனமாக இருக்க வனத்துறையினர் வேண்டுகோள்

பவானிசாகர் அணை பகுதியில் மக்னா யானை சுற்றித்திரிவதால் கால்நடை மேய்ப்போர் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பவானிசாகர்,
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் மக்னா யானை (ஆண், பெண் தன்மை இல்லாத யானை) உள்ளது. இந்த யானை தினமும் வனப்பகுதியை விட்டு வெளியேறி காராச்சிக்கொரை, புங்கார் காலனி ஆகிய இடங்களில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி புங்கார் காலனி கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் தனியார் காகித ஆலையின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தியது.
இந்த யானையை பவானிசாகர் வனத்துறையினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்தும், தகர டப்பா மூலம் ஒலி எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தாலும் அது மீண்டும் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அந்த யானை பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மாலை நேரங்களில் சுற்றித்திரிகிறது. எனவே புங்கார், புங்கார் காலனி மற்றும் சுஜில்குட்டை கிராமங்களை சேர்ந்த ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்பவர்கள் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






