கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம் பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றிபெறும் மாநாட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெறும் கூட்டணியே இனிவரும் தேர்தலில் வெற்றிபெறும் என நாமக்கல்லில் நடந்த உலக கொங்கு தமிழர் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று நாமக்கல்லில் 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சில அரசியல் கட்சியினர் மாநாட்டுக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். ஆனால் இது காசு செலவு செய்து வந்த கூட்டம் அல்ல. ஆண்களுக்கு இணையாக பெண்களும் சரிசமமாக வந்து உள்ளார்கள். இதுபோல எந்த மாநாட்டிலாவது கலந்து கொண்ட வரலாறு உண்டா?.
என்னை எப்படியாவது அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள். பெட்டியை எடுத்து கொங்குநாட்டுக்கு வந்து விட்டேன். இங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை கூட்டி போகாமல் இருக்க மாட்டேன்.
மாநாடு மூலம் நமது ஒற்றுமையை காண்பிப்பது தேச துரோகமா? அதை தடுக்க ஒருவர் வழக்கு போடுகிறார். வழக்கமாக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி அளிக்க மாட்டார்கள். நாம் கோர்ட்டுக்கு சென்று அனுமதி வாங்குவோம். ஆனால் குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால், மீண்டும் போஸ்டர் கிழிக்க தொடங்கி விட்டனர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு போர். அதில் ஜெயித்து தான் ஆகணும். இந்த மாநாடு நடக்க போகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு போர் முரசை கொட்டுகின்ற மாநாடு. யாருடன் கூட்டணிக்கு செல்கிறோம் என்பதில் தான் பிரச்சினை. எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்கிற உணர்வு தான் எனக்கும் உள்ளது.
எல்லோரும் ஆசைப்படுகிறது மாதிரி ஒரு கூட்டணியை நான் யோசித்தேன். அது ஒரே தேர்தலில் தி.மு.க.வுடனும் கூட்டணி, அ.தி.மு.க.வுடனும் கூட்டணி. சரியா?. இப்படி செய்தால் தான் எல்லோரையும் சமரசம் செய்ய முடியும். அப்படிப்பட்ட நிலையில் தான் ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பிரதான கட்சிகளுக்கு ஒரு அறை கூவலை விடுக்கிறோம். நீங்கள் ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குகிறீர்கள் என்று சொன்னால், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களாவது அந்த கட்சிக்கு அந்த தொகுதியில் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 2 பெரிய தலைவர்கள் கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படி தொகுதியை ஒதுக்கினால் பிரதான கட்சியினரே அந்த கூட்டணி கட்சிக்கு வேலை பார்க்க மாட்டார்கள். அவர்களே தோற்கடித்து விடுவார்கள். எனவே அதை புரிந்து கொண்டு எந்த பிரதான கட்சியாக இருந்தாலும், ஓட்டு இல்லாத தொகுதியை ஒரு கட்சிக்கு ஒதுக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் அது தான் நல்லது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை, ஜெயிக்கிற கூட்டணியில் தான் இருக்கும் என பல நேரங்களில் சொன்னது உண்டு. ஆனால் இனிவரும் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணியே வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






