மகன் இறந்த துக்கத்தால் விபரீத முடிவு: மகளுக்கு விஷம் கொடுத்து, லேப் டெக்னீசியன் தற்கொலை
மகன் இறந்த துக்கம் தாளாமல் மகளுக்கு விஷம் கொடுத்து, லேப் டெக்னீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லாவி,
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மேட்டு சூளகரையைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 40). லேப் டெக்னீசியன். இவருக்கும், தீபா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் தாமோதரனின் மகன் மிதுன் கார்த்தி (5) இறந்து விட்டான். அன்று முதல் தாமோதரன் மன வருத்தத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி தனது மகள் தன்சிகாவிற்கு (6) விஷம் கொடுத்து விட்டு தாமோதரனும் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தாமோதரனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சிறுமி தன்சிகா சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து தாமோதரனின் மனைவி தீபா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு லேப் டெக்னீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story