பொங்கலூர் அருகே கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு சென்றபோது பரிதாபம்
பொங்கலூர் அருகே கார்–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
பொங்கலூர்,
திருப்பூர் டி.எம்.எஸ். நகரை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் பாண்டித்துரை (வயது24). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(20). இவர்கள் இருவரும் நேற்று பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிகட்டை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட்டு மாலை 5 மணிக்கு திருப்பூருக்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். பின் இருக்கையில் பாண்டித்துரை அமர்ந்து இருந்தார்.
அலகுமலை–பெருந்தொழுவு சாலையில் கைகாட்டி என்ற இடம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளுக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற பாண்டித்துரைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாண்டித்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு பார்த்து விட்டு திரும்பி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.