அண்ணா நினைவு நாளையொட்டி சேலத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

அண்ணா நினைவு நாளையொட்டி சேலத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சேலம்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவுநாள் நேற்று சேலத்தில் பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு இருந்து மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தலைமையில், பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் அண்ணா சிலை நோக்கி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அங்கு அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சவுண்டப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் சேலம் பெரியார் சிலை அருகே இருந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா உருவச்சிலை நோக்கி மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்ததும், சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, முன்னாள் மேயர் சூடாமணி, மாநகர செயலாளர் ஜெயக்குமார், மாநகர அவைத்தலைவர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நாரணம்பாளையம் ஊராட்சி பொறுப்பாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணா உருவப்படத்திற்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






