புதுவை மாநிலத்தில் பொதுஇடங்களில் மது அருந்தினால் அபராதம் விதிக்க வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தல்
புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி,
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி மாநிலத்தில் அளவுக்கு அதிகமான மதுக்கடைகள் இருப்பதால், லாஸ்பேட்டை ஏர்போர்ட் மைதானம், அண்ணாதிடல், ரோடியர் மில் மைதானம், கடற்கரை சாலை பகுதிகள், சமுதாய கல்லூரி பின்புறம், சுடுகாடு மற்றும் இடுகாடுகள் என பல்வேறு பகுதிகளும் திறந்தவெளி மதுக்கூடங்களாக இயங்குகின்றன. இங்கு மது குடிக்கும் சில சமூக விரோதிகள் காலி மதுபாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொல்லை விளைகிறது. காவல்துறை இவற்றை எல்லாம் கண்டு கொள்வதில்லை
சுடுகாடு மற்றும் இடுகாடு போன்ற பகுதிகள் மதுகுடிக்கும் கூடாரமாக இயங்குவதால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பொது இடங்கள் மதுக்குடிக்கும் இடமாக இயங்குவதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
கோவா மாநிலம் மிகப்பெரிய சுற்றுலா மையமாக திகழ்ந்த போதிலும் அங்கே பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனவே அங்கு இதுபோன்ற தவறுகள் நடப்பதில்லை. வன்முறைகள் நடைபெறுவதும் தடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு வருமானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால் பாரதியார் வாழ்ந்த குயில் தோப்பு, பள்ளிக்கூடங்கள், கோவில்கள் உள்ள இடங்களுக்கு மிக அருகிலேயே மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. காவல்துறை ரோந்து பணியினை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
மதுவுக்கும், கஞ்சாவிற்கும் அடிமையாகி உள்ள பலர் புதுவைக்கு வருவதால் இங்குள்ள புகழ் நாளுக்கு நாள் சீர்கெடுகிறது. பிறமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குடும்பத்தோடு புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே பொது இடங்களில் மது குடித்தல் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவாவை போல் புதுவையில் பொது இடத்தில் மதுகுடித்தால் அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.