முத்துநாயக்கன்பட்டியில் அரசு மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்
முத்துநாயக்கன்பட்டியில் அரசு மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த முத்து
நாயக்கன்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துநாயக்கன்பட்டி-சேலம் ரோட்டில் ஊரின் நடுவே அரசு மதுக்கடை திறக்கப்பட்டது. அப்போதே அப்பகுதி மக்கள், கோவில், அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதியில் இந்த மதுக்கடை அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் அரசு மதுக்கடை ஏதும் இல்லாததால் நண்பகல் 12 மணிக்கு மேல் மதுபிரியர்கள் இந்த கடைக்கு அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து மது குடிப்பதுடன், அருகில் உள்ள கோவில் சுவரை அசுத்தமாக்கி விட்டு, கோவில் வளாகத்தில் சென்று படுத்து கொள்கிறார்கள். மேலும் ஒரு சிலர் குடிபோதையில் அந்த வழியாக செல்லும், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கடையை அகற்றக்கோரி ஏராளமான பெண்களும், ஆண்களும் கடை முன்பு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரும், வருவாய்த்துறையினரும் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பிறகு இதுவரை அந்த மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் அந்த மதுக்கடை முன்பு நண்பகல் 12 மணிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் அந்த கடையை அகற்ற வேண்டும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு சிலர் வீட்டில் இருந்து கொண்டு வந்த நாற்காலிகளை கடைக்கு செல்லும் வழியில் போட்டு அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த கடையை பணியாளர்கள் மூடி விட்டு அங்கிருந்து சென்றனர். இருப்பினும் அந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த மதுக்கடையை அகற்றுவதாக தாசில்தார் உறுதி அளித்து எழுதி கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம், இல்லை என்றால் ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் தாசில்தார் குமரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story