லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: 2 சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
மதுரை அருகே லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
மதுரை,
மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் லாரி ஒன்று பஞ்சர் ஆகி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரி டிரைவரை அழைத்து லஞ்சம் கேட்டுள்ளனர். உடனே டிரைவர் ரூ.100ஐ எடுத்து கொடுத்தார். அதற்கு அந்த போலீஸ்காரர், அரைபாடி லாரி டிரைவர் ரூ.500ஐ கொடுக்கிறார்கள். எனவே கண்டிப்பாக ரூ.200 கொடுக்க வேண்டும் என்கிறார். டிரைவர் பணம் இல்லை என்று கூறியும், போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த டிரைவர் புலம்பி கொண்டே போலீசாரிடம் ரூ.200ஐ கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த காட்சி வாட்ஸ்–அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தகவல் கிடைத்தது. உரிய விசாரணை நடத்திய அவர், லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், முருகதாஸ், ஏட்டு மலைபிரகாஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.