கோவையில் அமைக்கப்பட்டு உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மூலம் மாணவர்களின் கனவு நனவாகும்


கோவையில் அமைக்கப்பட்டு உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மூலம் மாணவர்களின் கனவு நனவாகும்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அமைக்கப்பட்டு உள்ள இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் மூலம் மாணவர்களின் கனவு நனவாகும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மற்ற துறைகளை காட்டிலும் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். கல்வி வளர்ச்சி திட்டங்களால் கல்வி புரட்சி ஏற்பட்டு இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசு பள்ளி மாணவர்கள் மீதும், அரசு பள்ளிகள் மீதும் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி முனைப்புடன் செயல்படுத்துகிறது. மாணவ- மாணவிகளின் மனதிலும், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் ஆக வேண்டும் என்று அவர்களின் உள்ளுணர்வு சொல்லும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் ஆக வேண்டுமென்ற வேட்கையோடும், லட்சியத்தோடும், ஆர்வத்தோடும் என்ன செய்வதென்று தெரியாமல் கோவை மாவட்ட ஏழைஎளிய மாணவ- மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு போட்டி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி அளித்து கனவை நனவாக்கும் வகையில், இந்த மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவு தேர்வை கோவையில் செயல்படும் ‘அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்துகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய, மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக இங்கு முற்றிலும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்விற்கான இலவச வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான நுழைவுத்தேர்வு அடுத்த சில மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. நுழைவு தேர்வுக்கான தகுதிகள் பற்றிய விவரங்களை மாணவ- மாணவிகள் இந்த மையத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம். இதற்கென பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட உள்ளது.

இங்கு ஆண்டுக்கு 500 மாணவ-மாணவிகள் குறையாமல் இந்த மையத்தில் இலவச பயிற்சி பெறுவார்கள். இதற்கான நுழைவு தேர்வானது, அனைத்து மாணவ- மாணவிகளும் எளிதில் எழுத கூடிய வகையிலேயே கேள்விகள் கேட்கப்படும். மாணவ- மாணவிகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இலவச பயிற்சி வகுப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஒ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக் குட்டி, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை. ரவிச்சந்திரன்,் மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, சமூக ஆர்வலர் அன்பரசு, ஆலயம் பவுண்டேசன் நிர்வாகி சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story