கோவையில் ஓட்டலில் நடந்த கண்காட்சியில் 24 பவுன் நகை திருட்டு
கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கண்காட்சியில் 24 பவுன் நகை திருடிய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நகை கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சிக்கு நேற்று முன்தினம் மாலையில் டிப்-டாப் உடையணிந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் வந்தது. அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த நகைகளை பார்வையிட்டனர்.
அதில் ஒரு வாலிபர் மற்றும் 2 பெண்கள் அங்கிருந்த விற்பனையாளரிடம் நகைகளின் விலையை கேட்டு அதை வாங்கி பார்த்தனர். அந்த நகைகள் பிடித்து இருப்பதாகவும், சிறிது நேரம் கழித்து வந்து அவற்றை வாங்கி செல்வதாகவும் கூறிவிட்டு அவர்கள் 6 பேரும் வெளியே சென்று விட்டனர்.
இந்த நிலையில் அந்த அரங்கில் இருந்த விற்பனையாளர்கள் நகையை சரி பார்த்த போது, அதில் 24 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, டிப்-டாப் உடை அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் விற்பனையாளரின் கவனத்தை திசைதிருப்புவதும், அதை பயன்படுத்தி மற்ற 3 பேரும் 24 பவுன் நகையை திருடும் காட்சியும் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 6 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
திருட்டில் ஈடுபட்ட 4 பெண்கள் மற்றும் 2 பேரை பார்க்கும்போது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் தெரிகிறது. அவர்கள், நகை கண்காட்சி குறித்து தெரிந்து கொண்டு, திட்டமிட்டு நகையை திருடி சென்று உள்ளனர். அந்த 6 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story