மீசலூர் கூட்டுறவு சங்க தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் தென்மண்டல விசாரணை குழு உத்தரவு
விருதுநகர் அருகே உள்ள மீசலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று தென்மண்டல விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள மீசலூர் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கு பொதுப்பிரிவை சேர்ந்த உறுப்பினர் பதவிக்கு ஜெகதீசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி 3 காரணங்களை கூறி தள்ளுபடி செய்துவிட்டார். தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை ஆட்சேபித்து ஜெகதீசன் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்குக்கான தென்மண்டல விசாரணை குழுவில் மனுதாக்கல் செய்தார்.
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையிலான இந்த விசாரணை குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மதுரை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், விருதுநகர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் திலீப்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மனுவை விசாரித்த விசாரணை குழுவினர் ஜெகதீசன் மனுவை தள்ளுபடி செய்ததற்கு தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட 3 காரணங்களையும் ஏற்க முடியாது என குறிப்பிட்டதுடன் அவர் மனுவை தள்ளுபடி செய்தது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கும், மீசலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கும், 6 பொதுப்பிரிவு உறுப்பினருக்கான தேர்தலை மீண்டும் நடத்தவும், அதில் மனுதாரர் ஜெகதீசனையும் ஒரு வேட்பாளராக சேர்த்துக்கொள்ள விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.