மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு செசன்ஸ் கோர்ட்டு அதிரடி உத்தரவு


மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு செசன்ஸ் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 3 Feb 2019 11:30 PM GMT (Updated: 3 Feb 2019 8:46 PM GMT)

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு எதிராக மும்பை செசன்ஸ் கோர்ட்டுஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 18 பாதுகாப்பு படையினர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய அமெரிக்க ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியிடம் கடந்த 2016-ம் ஆண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது நடந்த விசாரணையில் மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மேஜர் அப்துல் ரகுமான் பாஷா மற்றும் மேஜர் இக்பாலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் அப்துல் ரகுமான் பாஷா ஓய்வு பெற்றுவிட்டார். மேஜா் இக்பால் தற்போது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பில் பணியாற்றி வருவதாக நம்பப்படுகிறது.

இந்தநிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனு மீதான விசாரணையின் போது, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பது தொடர்பாக டேவிட் ஹெட்லியின் வாக்குமூலம் மட்டுமின்றி பல நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பு வக்கீல் கூறினார். இதையடுத்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன் 2008-ம் ஆண்டு செப்டம்பரில் டேவிட் ஹெட்லி மும்பை வந்துள்ளார். அவர் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இடங்களின் படங்களை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளான மேஜர் அப்துல் ரகுமான் பாஷா, மேஜர் இக்பாலுக்கு அனுப்பி உள்ளார். படங்கள் அனுப்பியதற்காக 2 பேரும் டேவிட் ஹெட்லிக்கு நிதி உதவி அளித்து உள்ளனர். மேலும் 2 அதிகாரிகளும் மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Next Story