விக்ரோலியில் லாரி மோதி தம்பதி பலி ஸ்கூட்டியில் சென்ற போது பரிதாபம்


விக்ரோலியில் லாரி மோதி தம்பதி பலி ஸ்கூட்டியில் சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

விக்ரோலியில் ஸ்கூட்டி மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர். அவர்களது 8 வயது மகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.

மும்பை,

மும்பை விக்ரோலியில் கிழக்கு விரைவு சாலையில் நேற்று முன்தினம் மதியம் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரிக்கு முன்னால் ஒரு ஸ்கூட்டி சென்றது. அந்த ஸ்கூட்டியில் சிறுமி உள்பட மூன்று பேர் இருந்தனர்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி திடீரென ஸ்கூட்டி மீது மோதியது. இதில் ஸ்கூட்டியில் இருந்த மூன்று பேரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.

இதில், துரதிருஷ்டவசமாக 2 பேர் லாரி சக்கரத்தில் சிக்கிக்கொண்டனர். உடல் நசுங்கிய அவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். சிறுமி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அக்சய் குப்தா (வயது35), அவரது மனைவி ஆர்த்தி குப்தா (33) என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் உயிர் தப்பியது அவர்களது 8 வயது மகள் ரஷி என்பதும் தெரியவந்தது.

விபத்து தொடர்பாக விக்ரோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story