கட்டிடம் இடிந்து விழுந்து சிறுமி உள்பட 3 பேர் பலி உல்லாஸ்நகரில் சோகம்


கட்டிடம் இடிந்து விழுந்து சிறுமி உள்பட 3 பேர் பலி உல்லாஸ்நகரில் சோகம்
x
தினத்தந்தி 3 Feb 2019 10:00 PM GMT (Updated: 3 Feb 2019 9:07 PM GMT)

உல்லாஸ்நகரில் 3 மாடி கட்டிடத்தில் வீட்டின் தளம் இடிந்து விழுந்து சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்தது.

அம்பர்நாத், 

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர்-3 இந்திரா காந்தி மார்க்கெட் அருகே ‘மேம்சாப்' என்ற 3 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் தளம் திடீரென இடிந்து முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் விழுந்தது. இதில் பாரம் தாங்க முடியாமல் அந்த வீட்டின் தளமும் இடிந்து தரை தளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் இரண்டாவது தளம், முதல் தளம் மற்றும் தரை தளத்தில் உள்ள வீடுகளில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்கள் படுகாயம் அடைந்து துடித்தனர். வீட்டு தளங்கள் இடிந்த போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தனர்.

தளம் இடிந்து வீடுகளில் வசித்து வந்தவர்கள் உள்ளே சிக்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியிருந்த 11 பேரை மீட்டனர். உடனடியாக அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உல்லாஸ்நகர் சென்ட்ரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2 வயது சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள். போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் நித்து மோகன்தாஸ்(வயது57), கனிதா மோரியா(28), ஷியா மோரியா(2) என்பது தெரியவந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படு கிறது. எனவே இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே உல்லாஸ்நகர் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிடத்தில் வீட்டு தளங்கள் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story