பர்பானியில் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேர் திடீர் ராஜினாமா கட்சி எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டால் அதிருப்தி


பர்பானியில் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேர் திடீர் ராஜினாமா கட்சி எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டால் அதிருப்தி
x
தினத்தந்தி 3 Feb 2019 9:45 PM GMT (Updated: 3 Feb 2019 9:15 PM GMT)

தங்களது கட்சி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த பர்பானி மாநகராட்சியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேர் திடீரென ராஜினாமா செய்தனர்.

புனே,

பர்பானி மாநகராட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 19 உறுப்பினர்கள் இருந்தனர். அந்த கட்சி கவுன்சிலர் விஷ்ணு நவலே என்பவர் மரணம் அடைந்ததை அடைத்து, அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வார்டில் விஷ்ணு நவலேயின் மனைவியை போட்டியிட வைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. இந்தநிலையில், திடீர் திருப்பமாக அந்த கட்சி எம்.எல்.ஏ. பாபா ஜானி துரானி, அதிக் இனாம்தார் என்பவரை தேசியவாத காங்கிரஸ் சார்பில் அந்த வார்டில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய செய்திருக்கிறார்.

பாபா ஜானி துரானியின் இந்த நடவடிக்கை, தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கவுன்சிலர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளதாகவும், இவ்வாறு ஒருவர் கையில் செயல்படுவதற்கு கட்சி மேலிடம் எவ்வாறு அனுமதிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், 13 கவுன்சிலர்கள் அதிரடியாக தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். அவர்கள் அனைவரும் பர்பானி கலெக்டர் சுவராஜ் பாரிகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். மேலும் அதிக் இனாம்தாரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனரை கேட்டுக் கொண்டு உள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ராஜினாமா செய்து உள்ள கவுன்சிலர்கள் 13 பேரும், கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரிடம் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா செய்திருப்பது பர்பானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அக்கட்சிக்கு இது பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

Next Story