அன்னா ஹசாரே உயிருடன் அரசு விளையாட வேண்டாம் உத்தவ் தாக்கரே ஆவேசம்


அன்னா ஹசாரே உயிருடன் அரசு விளையாட வேண்டாம் உத்தவ் தாக்கரே ஆவேசம்
x
தினத்தந்தி 3 Feb 2019 9:15 PM GMT (Updated: 2019-02-04T02:57:33+05:30)

அன்னா ஹசாரே உயிருடன் அரசு விளையாட வேண்டாம் என உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை, 

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பால், லோக் அயுக்தா சட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடந்த புதன்கிழமை உண்ணாவிரத போராட்டதை தொடங்கினார். நேற்று அவருடைய போராட்டம் 5-வது நாளில் அடியெடுத்து வைத்தது.

இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து கூறியதாவது:-

மராட்டிய அரசு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சமூக ஆர்வலர்களின் உயிருடன் அரசு விளையாடக்கூடாது.

அன்னா ஹசாரே வீதியில் இறங்கி ஊழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விடுத்து, உண்ணாவிரதம் மூலமாக தனது உயிரை பணயம் வைத்துள்ளார்.

தற்போது நாட்டு மக்கள் அனைவரும் மயக்க நிலையில் உள்ளனர். அவர்களை அந்த நிலையில் இருந்து வெளியேற்றவேண்டும். கங்கை நதியை சுத்தம் செய்ய வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சமூக ஆர்வலர் ஜி.டி.அகர்வால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அரசு அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் உயிரிழக்க நேரிட்டது.

எனவே உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே கைவிடவேண்டும். மக்களுக்காக வேறு வழியில் போராடவேண்டும். சிவசேனா அவருக்காக அனைத்து வகையிலும் ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story