பெங்களூருவில் பானசவாடி-ஒயிட்பீல்டுக்கு புதிய ‘டெமு’ ரெயில்

பெங்களூருவில், பான சவாடி-ஒயிட்பீல்டு இடையே புதிய ‘டெமு’ ரெயில் சேவை நேற்று தொடங்கியது. ரெயில் சேவையை பி.சி.மோகன் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
பெங்களூரு பானசவாடி-ஒயிட்பீல்டுக்கு நேற்று முதல் புதிய ‘டெமு’ ரெயில் சேவை தொடங்கியது. இதற்கான தொடக்க விழா பெங்களூரு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த ரெயில் சேவையை பி.சி.மோகன் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு கோட்ட மேலாளர் சக்சேனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த ரெயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7.50 மணிக்கு ஒயிட்பீல்டில் இருந்து புறப்படும் இந்த ரெயில்(வண்டி எண்-06577) 7.54 மணிக்கு ஹூடி ஹால்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும், அங்கிருந்து 7.55 புறப்படும் இந்த ரெயில் 8.02-க்கு கிருஷ்ணராஜபுரத்தையும், 8.09-க்கு பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தையும் சென்றடையும்.
இந்த ரெயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் மட்டுமே ரெயில் நின்று செல்லும். அதற்குள் பயணிகள் ரெயிலில் இறங்கிக் கொள்ளவும், ஏறிக் கொள்ளவும் வேண்டும். சரியாக காலை 8.30 மணிக்கு இந்த ரெயில் பானசவாடியை சென்றடையும். அதாவது காலை 7.50-க்கு ஒயிட்பீல்டுவில் இருந்து புறப்படும் இந்த ரெயில் 40 நிமிடத்தில் பான சவாடியை சென்றடையும் என்பது குறிப்பிடத்தகக்து.
மறுமார்க்கமாக மாலை 6.25-க்கு பானசவாடியில் இருந்து புறப்படும் இந்த ரெயில்(வண்டி எண்-06578) 6.44-க்கு பையப்பனஹள்ளி, 6.51-க்கு கிருஷ்ணராஜபுரம், 7.00-க்கு ஹூடி ஹால்ட் ஆகிய ரெயில் நிலையங்களை வந்தடையும். அப்போது பயணிகளின் வசதிக்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும். பின்னர் சரியாக இரவு 7.20 மணிக்கு அந்த ரெயில் ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ‘டெமு’ ரெயில் விடப்பட்டுள்ளதால் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் என்ஜினீயர்கள், தொழிலாளர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசல் இன்றியும், விரைவாகவும் வேலைக்கு சென்றுவிட முடியும் என்று கூறுகின்றனர்.
Related Tags :
Next Story






