நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை


நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை
x
தினத்தந்தி 4 Feb 2019 5:19 AM IST (Updated: 4 Feb 2019 5:19 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

மங்களூரு, 

மங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்களிடம் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும். யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ஒவ்வொரு தொகுதியாக சென்று பரிசீலனை செய்து வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். மைசூரு, மண்டியா தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பிரச்சினை உள்ளது. இருகட்சி தலைவர்களும் சேர்ந்து பேசி இந்த பிரச்சினை சரி செய்யப்படும். கட்சியின் கொள்கைகளை கடைபிடிப்பது முக்கியமானது.

கூட்டணி ஆட்சிக்கு பிரச்சினை வரும்படி யாரும் பேச வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சிக்கு பங்கம் ஏற்படும் வகையில் காங்கிரசில் சிலர் பேசி வருகிறார்கள். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருப்பவர்களுக்கு பயம், கட்டுப்பாடு உள்ளது. ஆனால் காங்கிரசில் யாருக்கும் எந்த பயமும், கட்டுப்பாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வி அடைந்துள்ளது. அவர்கள், எங்கள் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பணத்தை எங்கு வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரை கொடுக்க கூட பா.ஜனதாவினர் தயாராக உள்ளனர். அவர்களுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது.

நளின்குமார் கட்டீல் எம்.பி. கூட கூட்டணி அரசு கவிழும் என்று கூறுகிறார். அவரும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மகாத்மா காந்தியை இந்து மகாசபையினர் அவமதித்துள்ளனர். இதனை கண்டித்து நாளை (அதாவது, இன்று) மாநிலம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story