எடியூரப்பாவின் முதல்-மந்திரி ஆசை நிறைவேறாது குமாரசாமி நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார்


எடியூரப்பாவின் முதல்-மந்திரி ஆசை நிறைவேறாது குமாரசாமி நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார்
x
தினத்தந்தி 3 Feb 2019 11:49 PM GMT (Updated: 3 Feb 2019 11:49 PM GMT)

எடியூரப்பாவின் முதல்-மந்திரி ஆசை நிறைவேறாது என்றும், குமாரசாமி நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் சித்தராமையா கூறினார்.

கோலார் தங்கவயல்,


கோலாரில் நேற்று முன்னாள் மத்திய மந்திரி கிருஷ்ணப்பாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா கலந்து கொண்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தலைவர்களுடன் தொடர்பில் இல்லை என்றும், இதனால் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றும் அசோக் கூறியுள்ளார். ஆனால் குமாரசாமி நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இந்த கூட்டணி ஆட்சியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடரும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்து கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு முதல்-மந்திரி ஆகிவிடலாம் என்று எடியூரப்பா கனவு கண்டு வருகிறார். ஆனால் அவரின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்படுவதை எடியூரப்பாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடியூரப்பாவிடம் இருந்து கர்நாடக பா.ஜனதா தலைவர் பதவி பறிக்கப்படும்.

குமாரசாமியை நீங்கள் முதல்-மந்திரி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கூறவில்லை. இதனால் ராஜினாமா செய்து விடுவேன் என்று ஏன் கூறுகிறார்? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

வரும் காலத்தில் முதல்-மந்திரி ஆகிவிடலாம் என்று நிறைய பேர் ஆசையில் உள்ளனர். அது அவர்களின் விருப்பம். அதுபற்றி நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. நாடாளுமன்ற ேதர்தலில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி 22 இடங்களை கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story