அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:00 AM IST (Updated: 4 Feb 2019 6:31 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம், திருத்தணிக்கு வந்த ரெயில்களில் வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்திய சோதனையில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம்,

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று சிலர் ரே‌ஷன் அரிசியை கிலோ 5 ரூபாய் கொடுத்து வாங்கி மூட்டையாக கட்டி வெளிமாநிலத்துக்கு கடத்துவதை தொழிலாக வைத்துள்ளனர்.

அரக்கோணத்திலிருந்து ஆந்திரா மற்றும் காட்பாடி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ரெயில்கள் செல்கின்றன. மூட்டையாக சேகரித்த அரிசியை கடத்தல்காரர்கள் வெளிமாநிலத்துக்கு கடத்திச்சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். இதே அரிசி வெளிமாநிலங்களில் பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து கிலோ ரூ.40–க்கு விற்கின்றனர்.

ஏழை மக்கள் பசியைப் போக்க விலையில்லாமல் வழங்கும் ரே‌ஷன்அரிசி, கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் ரே‌ஷன்அரிசி கடத்தலை தடுக்க அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையில் ஊழியர்கள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் தனித்தனி குழுவாக அரக்கோணம், திருத்தணி ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர். அவர்கள் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில், புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் பாசஞ்சர் ரெயில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் பாசஞ்சர் ரெயில்களில் ஏறி சோதனையிட்டனர்.

அப்போது இருக்கைகளுக்கு அடியிலும், கழிப்பறை பகுதியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய மூட்டைகளில் கட்டி வைத்திருந்த ரே‌ஷன்அரிசியை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 டன் ரே‌ஷன்அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story