நாராயணி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


நாராயணி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:00 PM GMT (Updated: 4 Feb 2019 1:32 PM GMT)

ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

காட்பாடி,

ஆண்டுதோறும் பிப்ரவரி 4–ந் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பேனரில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

மேலும் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சியையும் கலெக்டர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். நிகழ்ச்சியில், நாராயணி நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளுக்கும் வழங்கினர்.

நிகழ்ச்சியில், வேலூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன், நாராயணி பீடமேலாளர் சம்பத், நாராயணி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கன்னிகா பரமேஸ்வரி மற்றும் நர்சிங் கல்லூரி ஆசிரியைகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story