தண்டையார்பேட்டையில் பிரியாணி கடைக்காரர் கொலையில் 2 பேர் கைது


தண்டையார்பேட்டையில் பிரியாணி கடைக்காரர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 4:00 AM IST (Updated: 4 Feb 2019 10:13 PM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே பிரியாணி கடைக்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (வயது 41). இவர், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் கடைக்கு தேவையான பொருட்களை மார்க்கெட்டில் இருந்து வாங்கிக்கொண்டு சைக்கிளில் வந்த ரவியை, தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் முத்துக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த தண்டையார்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்த ரவுடியான ரேடியோ விஜய் (28) மற்றும் அவருடைய கூட்டாளியான புளியந்தோப்பை சேர்ந்த ராம்குமார் (28) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், ரவியின் கடையில் பிரியாணி சாப்பிட்ட ரவுடி ரேடியோ விஜய், சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல், மேற்கொண்டு மாமூல் கேட்டு ரவியை மிரட்டினார். இதுபற்றி ரவி அளித்த புகாரின்பேரில் விஜயை போலீசார் கைது செய்தனர்.

இந்த முன்விரோதம் காரணமாக தன்னை போலீசில் சிக்க வைத்த பிரியாணி கடைக்காரர் ரவியை, விஜய் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றது தெரிந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான மற்றொரு கூட்டாளியான அப்பு என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story