கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 10:30 PM GMT (Updated: 4 Feb 2019 5:37 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் இருந்து மெதிப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அப்பகுதியில் உள்ள காட்டுக்கொல்லைமேடு, எளாவூர், சின்னாரெட்டிகண்டிகை, வல்லம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளாவூர் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

ஆனால் மிகவும் மோசமாக காணப்படும் சாலையால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை. பழுதடைந்து காணப்படும் இந்த சாலையால் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு வருகின்றன. மேலும், அவசர காலங்களில் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதிலும் காலதாமதமும், சிரமும் ஏற்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.27 லட்சத்து 70 ஆயிரம் செலவில் ஒன்றிய பொறியாளர்களின் மேற்பார்வையில் இந்த சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அப்போது சரிவர அமைக்காத காரணத்தினால் தான் தற்போது சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை சீரமைக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சாலையை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எளாவூர் அடுத்த காட்டேரி என்ற இடத்தில் நேற்று சாலைமறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச்செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ஜெ.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அதிகாரி ரவி, ஒன்றிய உதவி பொறியாளர்கள் நரசிம்மன், கலாராணி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் டில்லி பாபு, ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்த பெண்கள், பொறியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழுதடைந்த சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் 6 மாதத்திற்குள் அப்பகுதியில் புதிய சாலை போடப்படும் எனவும் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story