எருமப்பட்டி அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை காட்டுப்பகுதியில் பிணம் வீச்சு
எருமப்பட்டி அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காட்டுப்பகுதியில் பிணத்தை வீசிச்சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
எருமப்பட்டி,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி கன்னிமார் கோவில் வளைவு அருகே இரட்டை குளம் உள்ளது. இதன் அருகில் காட்டுப் பகுதியில் ஒரு பிணம் கிடப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எருமப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. பிணம் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஆடைகள் எரிந்த நிலையிலும், செருப்பு மற்றும் கைக்கெடிகாரமும் கிடந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், பிணமாக கிடந்தவர் பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி பிரிவை சேர்ந்த பெரியண்ணன் மகன் குமரேசன் (வயது 23), என்பது தெரியவந்தது. இவர் பி.காம். பட்டதாரி ஆவார். தனியார் நிதி நிறுவனத்தில் வீடுகளுக்கு கடன் வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
குமரேசனை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து இருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை கடத்தி வந்து கொலை செய்தார்களா? அல்லது கொலை செய்து உடலை கொண்டு வந்து கொலையாளிகள் இங்கு வீசிச் சென்றார்களா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து சில நாட்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுபற்றி எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரேசனை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார் கள்.
பட்டதாரி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story