வீட்டுமனை பட்டா கேட்டு 120 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்


வீட்டுமனை பட்டா கேட்டு 120 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 6:59 PM GMT)

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 120 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கமாக பொதுமக்கள் ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே மக்கள் விடுதலை கழக தலைவர் சீனிவாசராகவன் தலைமையில் 120 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் நிரம்பி வழிந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் வேலு வெளியே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் அருந்ததியின மக்கள் குடியிருக்க சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். குழந்தைகள் படிப்பதற்கும் சிரமமாக உள்ளது. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நிலக்கோட்டை அருகேயுள்ள ஜெ.ஊத்துப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்தவர்கள் அடிப்படை வசதி கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரவில்லை. இதனால் ஒரு குடம் குடிநீரை ரூ.5-க்கு வாங்கி வருகிறோம். மேலும் தெருவிளக்குகளும் போதிய அளவில் இல்லை. குடியிருப்பின் பெரும்பகுதி இருளில் மூழ்கி விடுகிறது. எனவே, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும், என்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள சாரபள்ளா பகுதியை சேர்ந்த பரக்கத்பானு (25) தனது ஒரு வயது மகளுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவருக்கும், எனக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது பெற்றோர் 50 பவுன் நகைகளும், ரூ.2 லட்சமும் வரதட்சணையாக வழங்கினர். தற்போது வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் துன்புறுத்துகின்றனர், என்று கூறியிருந்தார்.

Next Story