வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், குறைதீர்க்கும் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி புகார்


வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், குறைதீர்க்கும் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி புகார்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:15 AM IST (Updated: 5 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் புகார் செய்தார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.

கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஒரு மனு அளித்தார். இவர், தி.மு.க. விவசாய தொழிலாளர் அணியின் போடி ஒன்றிய துணை அமைப்பாளராக உள்ளார்.

அவர் அளித்த மனுவில், ‘நான் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி உள்ளேன். கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்று இருந்தது. கடந்த 31-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட வாக்குரிமையை எனக்கு திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும். நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், எங்கள் பகுதியில் மேலும் 6 பேரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாநில பொறுப்பாளர் தலித்ராயன் தலைமையில் சிறுவர்களுடன் சிலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில், ‘மேல்மங்கலம் மேட்டுப்பட்டி பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினர் ஊரில் வசிக்க முடியாமல் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

கடமலைக்குண்டுவை சேர்ந்த செல்வச்சாமி மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கடமலைக்குண்டுவில் ஒரு தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் மருத்துவமனையால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சிலரின் தூண்டுதலால் அந்த மருத்துவமனையை முடக்கப் பார்க்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

Next Story