மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பஸ் வசதி கேட்டு 2-வது முறையாக மாணவர்கள் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பஸ் வசதி கேட்டு 2-வது முறையாக மாணவர்கள் மனு
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 8:05 PM GMT)

பெரம்பலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் 2-வது முறையாக மாணவர்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் ஆலத்தூர் தாலுகா காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் நேற்று 2-வது முறையாக கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் மலையப்ப நகரில் வசித்து வருகிறோம். சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். பெரம்பலூர் மலையப்பநகர் வழியாக காரைக்கு செல்லும் தனியார் மினி பஸ்களில் பள்ளிக்கு சென்று வந்தோம்.

ஆனால் தற்போது அந்த தனியார் மினி பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. மேலும் அரசு பஸ் பெரம்பலூரில் இருந்து காரைக்கு நாரணமங்கலம் வழியாக இயக்கப்படுகிறது. இதனால் மலையப்பநகரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையப்ப நகர் விலக்கு ஆலமரத்தடி பஸ் நிறுத்தத்திற்கு சென்று தான் பஸ் ஏற வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் அந்த பஸ்சும் வராவிட்டால் மொத்தம் 4 கிலோ மீட்டர் தூரம் சிரமத்துடன் நடந்தே பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட தனியார் மினி பஸ்களை மீண்டும் இயக்கக்கோரியும், மேலும் மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியின் வழியாக காரைக்கு செல்ல அரசு பஸ் வசதி செய்து தரக்கோரியும், மேலும் பள்ளிகளில் அதற்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா பெரிய வெண்மணி வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் சட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 193 மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர். அந்த மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மஞ்சுளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story