த.குடிக்காட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கலெக்டரிடம் இளைஞர்கள் மனு


த.குடிக்காட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கலெக்டரிடம் இளைஞர்கள் மனு
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 8:13 PM GMT)

த.குடிக்காட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் இளைஞர்கள் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 316 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் த.குடிக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில், உடையார்பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட த.குடிக்காடு கிராமத்தில் தற்போது புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, மாவட்ட நிர்வாகத்திடம் 2 முறையும், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் 1 முறையும் எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என மனு அளித்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் கடை அப்பகுதியில் வராது என உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது கடை திறப்பதற்கான பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மற்றும் பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகி வருங்கால சமுதாயமே இல்லாத சூழல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வங்குடி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் ஊரின் மையபகுதியில் வட்டக் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் முதலைகள் காணப் படுகிறது. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள், வட்டக் குளத்தை ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால் முதலையை அகற்ற எந்த விதமான நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தில் தண்ணீர் குடிக்க சென்ற ஒரு ஆட்டை முதலை பிடிக்க முயன்றது. இதனை கண்ட ஊர் மக்கள் கூச்சலிட்டதை அடுத்து முதலை தண்ணீருக்குள் சென்று விட்டது. உயிர் பலி அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் குளத்தில் உள்ள முதலையை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story