ராசிபுரத்தில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ராசிபுரத்தில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 4 Feb 2019 9:15 PM GMT (Updated: 4 Feb 2019 8:21 PM GMT)

ராசிபுரத்தில் ரூ.60 லட்சத்திற்கு பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனையானது.

ராசிபுரம், 

ராசிபுரம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் மைதானத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், முருங்கப்பட்டி, முத்துக்காளிப்பட்டி, குருசாமிபாளையம், சவுதாபுரம், வையப்பமலை, பட்டணம், வடுகம், ப.மு.பாளையம், தேங்கல்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

திருப்பூர், ஆத்தூர், அவிநாசி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்திற்கு எடுத்தனர்.

இதில் ஆர்.சி.எச்.ரக பருத்தி 2,283 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 572 மூட்டைகளும் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,439 முதல் அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.5,955 வரை ஏலம் விடப்பட்டது. அதேபோல் டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6,889 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,219 வரை ஏலம் விடப்பட்டது.

நேற்று நடந்த ஏலத்தில் 2,855 பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. மழையின்மை காரணமாக பருத்தி வரத்து குறைவாக இருந்தது.

Next Story