திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு மோசடியில் தலைமறைவானவர் பிடிபட்டார்


திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு மோசடியில் தலைமறைவானவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:15 AM IST (Updated: 5 Feb 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த வேலஞ்சேரி, திருத்தணி பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தி 35½ லட்சம் மோசடி செய்த வழக்கில் 1½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருத்தணி அருகேயுள்ள வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரபிரசாத் (வயது 47). இவர் அப்பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரை நம்பி வேலஞ்சேரி, திருத்தணி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதம் தவறாமல் பணம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்திரபிரசாத்துக்கு உதவியாக அவரது தாயார் கஸ்தூரி (55), தங்கை கிரிஜா (42), மனைவி சுமதி (42) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தன்னிடம் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தியவர்களுக்கு சீட்டுபணம் முடிந்தவுடன் சேரவேண்டிய பணத்தை உரிய நேரத்தில் தராமல் இந்திரபிரசாத், தனது குடும்பத்தாருடன் சேர்ந்து ஏமாற்றி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை இந்திரபிரசாத்தை கேட்டும் பணம் தராமல் அவர் மோசடி செய்து விட்டு தன் குடும்பத்தாருடன் தலைமறைவாகி விட்டார்.

அவர், சுமார் 40 பேரிடம் ரூ.35 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்து தலைமறைவானதும் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே கடந்த ஆண்டு கஸ்தூரி, கிரிஜா, சுமதி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான இந்திரபிரசாத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவர், வேலஞ்சேரியில் பதுங்கி இருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜ், சாரதி, வாசுதேவன் ஆகியோர் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இந்திரபிரசாத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story