தமிழக அரசியலில் மோடியின் வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தமிழக அரசியலில் மோடியின் வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 5 Feb 2019 5:15 AM IST (Updated: 5 Feb 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசியலில் மோடியின் வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் புதுப்பாளையம் பிரிவில் பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வருகிற 10–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 70 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானம் தயார் செய்யப்பட்டு மேடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை பா.ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பா.ஜனதா கட்சியின் 8 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோட்ட இணை செயலாளர் பாயிண்ட் மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் இது குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

வருகிற 10–ந் தேதி மதியம் 1 மணிக்கு மேல் பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார். அன்று காலை ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மோடி திருப்பூர் வருகிறார். பெருமாநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே அரசு சார்பில் விழா நடக்கிறது. அதில் பல நல்ல திட்டங்கள் அறிவிப்பு செய்து தொடங்கப்படும். அந்த விழா முடிந்ததும் 8 நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 2 லட்சம் தொண்டர்கள் இதில் பங்கேற்பார்கள். தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்கு பதில் சொல்லும் கூட்டமாக இது இருக்கும்.

தமிழக பா.ஜனதா கட்சி வாக்குச்சாவடி அளவுக்கு நிர்வாகிகளை நியமித்து பலம் பெற்றுள்ளது. மதுரையை விட திருப்பூரில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள். தமிழகத்தில் பா.ஜனதாவை கிண்டலடித்தவர்களை எங்களுடைய பணியால் முறியடிப்போம். பா.ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள். அமித்ஷா, யோகி ஆதித்யநாத், ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி ஆகியோர் வர இருக்கிறார்கள்.

முத்ரா வங்கி கடன், இன்சூரன்ஸ் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்பட பா.ஜனதா ஆட்சியினால் பலன் பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றும் நிகழ்ச்சி வருகிற 26–ந் தேதி நடக்கிறது. 45 லட்சம் பா.ஜனதா தொண்டர்கள் தங்களின் வீட்டில் ‘எனது குடும்பம், பா.ஜனதா குடும்பம்’ என்று தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா கொடியேற்றி விட்டு, ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இது பா.ஜனதா கட்சியின் பெருமையை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை பலம் பொருந்திய கூட்டணி அமையும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியை விட எங்கள் கூட்டணி பலமாக இருக்கும். அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். நிச்சயமாக தமிழக அரசியலில் இந்த தேர்தலும் சரி, மோடியின் வருகையும் சரி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். பா.ஜனதா அரசு நல்ல பட்ஜெட்டை மக்களுக்கு கொடுத்துள்ளது. பிரதமர் கூறியது போல் பா.ஜனதாவினர் ஓட்டு கேட்கும்போது தலைநிமிர்ந்து செல்வார்கள். தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து, பலம்பெற்று இருக்கிறது.

சுமார் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆண்டது. இப்போது தான் ராகுல்காந்தி கண்ணுக்கு ஏழைகள் தெரிகிறார்கள். 7 கோடி பேருக்கு முத்ரா வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கீழ் ஒருத்தரையாவது பணியமர்த்தி இருப்பார்கள். அப்படி பார்த்தால் 14 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் சுயதொழில் செய்பவர்களை ராகுல்காந்தியும், அவர்களுடைய கட்சியினரும் கேவலமாக பேசுகிறார்கள். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக ராகுல்காந்தி கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்தார்கள்.

தற்போது மத்திய பிரதேசத்தில் ரூ.2½ லட்சம் கடன் திட்டத்தில் விவசாயிகளுக்கு மிக குறைந்த தொகையை கொடுத்திருக்கிறார்கள். இதுதான் விவசாயிகளை கேவலப்படுத்தும் செயல். கடன் இல்லாத விவசாயிகளின் பெயர்களை கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் சாயம் வெளுத்து வருகிறது. அந்த மாநில மக்களும் மறுபடியும் பா.ஜனதாவுக்கு அதிக இடம் கொடுப்பார்கள்.

மு.க.ஸ்டாலின் இந்து மத திருமணத்தை மோசமாக விமர்சித்து இருக்கிறார். பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் பழக்கத்தை விமர்சித்து உதாசீனப்படுத்தக்கூடாது. இந்து மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள். மதம் சார்ந்த பிரிவினையை தி.மு.க. ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதில் தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார். விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.


Next Story