இளையான்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்– மகளிடம் நகை பறிப்பு மர்ம ஆசாமிகள் துணிகரம்
இளையான்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்–மகளிடம் நகைகளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 57). இவர்களது மகள் அனிதா (28). இவரது கணவரும், தந்தை கேசவனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் அனிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளாள்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தமிழ்ச்செல்வி, தனது மகள், பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் அனிதா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தனர். அப்போது கண்விழித்த 2 பேரும் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடர்கள் என்று கூச்சல் போட்டனர். இதனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்ததில் தாயும், மகளும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் பறித்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இளையான்குடி பகுதியில் சமீப காலமாகவே வழிப்பறி, நகை பறிப்பு, வீடுபுகுந்து திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.