மும்பை மாநகராட்சி கல்வி பட்ஜெட் தாக்கல் பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.202 கோடி ஒதுக்கீடு


மும்பை மாநகராட்சி கல்வி பட்ஜெட் தாக்கல் பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.202 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 5 Feb 2019 3:13 AM IST (Updated: 5 Feb 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி கல்வி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.202 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு மழைக்கால செருப்பு இலவசமாக வழக்கப்படுகிறது.

மும்பை, 

மும்பை மாநகராட்சியில் ரூ.2 ஆயிரத்து 733 கோடியே 77 லட்சம் கல்வி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கல்வி பட்ஜெட்டை மாநகராட்சி அதிகாரி தாக்கல் செய்ய கல்வி கமிட்டி சேர்மன் மங்கேஷ் சாட்டம்கர் பெற்றுக்கொண்டார். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. வரும் நிதி ஆண்டில் மாநகராட்சி பள்ளிகளில் 6 ஆயிரத்து 666 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.24 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை எளிதில் தேடி கண்டுபிடித்து படிக்க வசதியாக மின்னணு நூலகம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் 1,300 வகுப்பறைகளை டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்ற முதல் கட்டமாக ரூ.5 கோடியே 33 லட்சமும், 2-வது கட்டமாக ரூ.2 கோடியே 91 லட்சத்தையும் ஒதுக்கி உள்ளது. விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய 260 அங்கன்வாடி மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளுக்காக ரூ.7 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய மேசை, இருக்கைகள் வாங்க ரூ.9 கோடியே 87 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 59 மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 33 பள்ளி கட்டிட பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும். 26 பள்ளி கட்டிடங்களின் சீரமைப்பு பணி அடுத்த ஆண்டு வரை நடக்கும். மேலும் 11 புதிய பள்ளிகள் கட்டும் பணி தொடங்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு 12 பள்ளி சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளது.

மேலும் 4 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்காக ரூ.201 கோடியே 73 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகை மற்றும் போக்குவரத்துப்படி வழங்க ரூ.3 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 150 தொடக்க பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. உருது பாடத்திற்கு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 21 தொடக்கப் பள்ளிகளிலும், 2 உயர்நிலை பள்ளிகளிலும் மினி அறிவியல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க வசதியாக 10 மண்டலங்களில் ரூ.3 கோடியே 68 லட்சம் செலவில் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதேபோல விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே படித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.4 கோடியே 45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப்பை, மழை கோட் உள்ளிட்ட 85 கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் மாநகராட்சி மாணவர்களுக்கு 2, 4 கோடு நோட்டு, எழுத்து பயிற்சி புத்தகம், மழைக்கால செருப்பு ஆகியவற்றை வழங்க உள்ளது.

இந்த திட்டத்திற்காக ரூ.19 கோடியே 69 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு மாநகராட்சி நிதி ஒதுக்கி உள்ளது.

Next Story