7 பேர் விடுதலைக்கு கவர்னர் முடிவெடுக்க மக்கள் ஆதரவுடன் அழுத்தம் தரப்படும் அற்புதம்மாள் பேச்சு


7 பேர் விடுதலைக்கு கவர்னர் முடிவெடுக்க மக்கள் ஆதரவுடன் அழுத்தம் தரப்படும் அற்புதம்மாள் பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2019 4:30 AM IST (Updated: 5 Feb 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

7 பேரின் விடுதலைக்கு மக்கள் ஆதரவுடன் கவர்னர் முடிவெடுக்க அழுத்தம் தரப்படும் என்று அற்புதம்மாள் கூறினார்.

ராஜபாளையம்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரறிவானின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசியதாவது:- எனது மகன் சிறை சென்று 28 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. தற்போது எல்லா உண்மைகளும் வெளியே வந்து, உச்ச நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்யலாம் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கையெழுத்திட்டால் மட்டுமே 7 பேரின் விடுதலை சாத்தியமாகும்.

ஆனால் 5 மாதங்களுக்கு மேலாகியும் கவர்னர் கையெழுத்திடவில்லை. அதில் பிரச்சினை இருந்து திருப்பி அனுப்பப்பட்டால், திருத்திக் கொள்ள முடியும். கவர்னர் அதை செய்யவில்லை. இதனால், என்ன காரணம் என்று தெரியாத நிலையில் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தேன். பின்பு மக்களை சந்திக்கலாம் என்று நான் முடிவு செய்து சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அனைத்து மக்களின் ஆலோசனையை பெற்று இறுதியாக கவர்னரை சந்திக்கலாம் என்று உள்ளேன். போராட்டம் நடத்த எனக்கு உடன்பாடில்லை.

சட்டத்தின் மூலம் கிடைத்த தீர்ப்பை அமைதியாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறேன். சாமானிய மக்கள் சட்டத்தை மதிக்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை ஏன் மதிக்கவில்லை என்று நாங்கள் கேட்கிறோம். எனக்கு அரசியல் பற்றி கவலை இல்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அற்புதம்மாள், வருகிற 14-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். அதன்பின்னர் மக்கள் ஆதரவுடன் சென்னையில் கூடி, 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் முடிவு எடுக்க அழுத்தம் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் கவர்னர் பிரச்சினையின் மீது முடிவெடுத்து விட்டால், இந்த போராட்டத்திற்கு தேவை இருக்காது. அனைவரும் ஒருமித்த குரலுடன் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும். இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story