தேசிய நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மணலால் விபத்து ஏற்படும் அபாயம் உடனடி நடவடிக்கை எடுக்க ம.தி.மு.க. கோரிக்கை
ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மணலால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் மற்றும் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம்–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான இடங்களில் மணல் குவியல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கலெக்டர் அலுவலகம் முதல் மதுரை ரோடு வரையிலும் சாலையில் மணல் குவியல் உள்ளது. இதனால் சாலையின் அகலம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு மணல் குவியல்கள் நிறைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் சாலையின் மையப்பகுதியிலேயே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் எதிர்எதிரே வரும் வாகனங்கள் விபத்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகஅளவில் உள்ளது.
மேலும் சாலையோரங்களில் சுமார் 2 மீட்டருக்கும் அதிகமாக மணல் பரப்பு ஆக்கிரமித்துள்ளதால் இருசக்கர வாகனங்கள் செல்ல வழியில்லாத நிலை இருந்து வருகிறது. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி விபத்துகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது மணல் துகள்கள், தூசிகள் காற்றில் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளை நிலைதடுமாறச்செய்கிறது. இதேபோல இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையோர மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன்பாக தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள மணல் குவியலை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ம.தி.மு.க.சார்பில் மாவட்ட துணை செயலாளர் வி.கே.சுரேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.