விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி 11-ந்தேதி முதல் தொடர் போராட்டம் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி 11-ந்தேதி முதல் தொடர் போராட்டம் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:59 AM IST (Updated: 5 Feb 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி வருகிற 11-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். கார்மாங்குடி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கிடுசாமி, சிறுதொண்டை நாயனார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தர்ராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியர் மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டம் 32 லட்சம் மக்கள் வசிக்கும் மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. இதனால் நிர்வாக வசதிக்காகவும், நலிவடைந்தப் பகுதிகளை மேம்படுத்தவும் கடலூர் மாவட்டத்தை பிரித்து மிகவும் பின்தங்கிய பகுதியான விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது.

விருத்தாசலம் வருவாய் கோட்டத்தில் உள்ள எந்த ஒரு கிராம பகுதியையும் புதிதாக தொடங்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது, விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் விரைவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி வருகிற 11-ந்தேதி முதல் அனைத்து கட்சிகள், பொது அமைப்புகள் சார்பில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு போராட்டம் என தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தொழில்அதிபர் அகர்சந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், டாக்டர் கோவிந்தசாமி, முத்துக்குமார், டாக்டர் தமிழரசி, தி.மு.க. வக்கீல் அருண்குமார், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அய்யாயிரம், பா.ஜ.க. செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி கதிர்காமன், தமிழக வாழ்வுரிமை கட்சி சேகர், மனிதநேய மக்கள் கட்சி தமிமுன் அன்சாரி, ஜனநாயக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கந்தசாமி, மாட்டு வண்டி தொழிலாளர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story