ராகுல்காந்தியை பிரதமராக்க 40 தொகுதியிலும் காங்கிரஸ் – தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் நாராயணசாமி பேச்சு


ராகுல்காந்தியை பிரதமராக்க 40 தொகுதியிலும் காங்கிரஸ் – தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2019 12:00 AM GMT (Updated: 4 Feb 2019 11:36 PM GMT)

ராகுல்காந்தியை பிரதமராக்க தமிழகம்– புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரி,

மகாத்மா காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுட்டும், தீ வைத்தும் எரித்த அகில பாரத இந்து மகா சபா மற்றும் மதவாத உத்தரபிரதேச பா.ஜ.க. அரசை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:–

இந்தியா சுதந்திரம் அடைய பாடுபட்டவர் மகாத்மாகாந்தி. சுதந்திர போராட்டத்தின்போது இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார். அப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று போராடியது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகள்.

ஆர்.எஸ்.எஸ்.சி. அமைப்பின் வழித்தோன்றல் தான் பா.ஜ.க. எனவே அதன் கொள்கைகளை பா.ஜ.க. செயல்படுத்தி வருகிறது. மகாத்மா காந்திக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு வருகிறது.

புதுவை மாநில வளர்ச்சிக்கு பிரதமர் மோடியும், கவர்னரும் தடையாக இருந்து வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த 4½ ஆண்டு ஆட்சியில் புதுவைக்கு எதுவும் செய்யவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்த போது புதுவை மாநிலத்தில் வளர்ச்சி இல்லை. சட்டம்–ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது. எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி தனது பணியை செய்ய வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க உள்ளார்.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. ராகுல்காந்தியை பிரதமராக்க கருத்து வேறுபாடுகளை களைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். புதுவையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, எல்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, புதுச்சேரி டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், கட்சியின் துணை தலைவர்கள் பெத்தபெருமாள், பி.கே.தேவதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி சென்ற பின்னர் மாணவர் காங்கிரசார் பிரதமர் மோடியின் உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் அதனை தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story