அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:00 PM GMT (Updated: 2019-02-05T05:25:47+05:30)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக கல்லூரியில் 3 விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் சுமார் 165 பேர் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியில் சரியாக உணவு, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மாணவர்கள் கூறி வந்தனர். இருப்பினும் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று காலை கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து கல்லூரி விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story