குற்றாலத்தில் மாணவர் மர்ம சாவு: காதலியை மானபங்கம் செய்ய முயன்ற விடுதி மேலாளர்–பணியாளர் கைது


குற்றாலத்தில் மாணவர் மர்ம சாவு: காதலியை மானபங்கம் செய்ய முயன்ற விடுதி மேலாளர்–பணியாளர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 9:30 PM GMT (Updated: 5 Feb 2019 1:49 PM GMT)

குற்றாலம் விடுதியில் பாலிடெக்னிக் மாணவர் மர்மமாக இறந்த விவகாரத்தில் அவரது காதலியை மானபங்கம் செய்ய முயன்ற விடுதி மேலாளர், பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

குற்றாலம் விடுதியில் பாலிடெக்னிக் மாணவர் மர்மமாக இறந்த விவகாரத்தில் அவரது காதலியை மானபங்கம் செய்ய முயன்ற விடுதி மேலாளர், பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

பாலிடெக்னிக் மாணவர்

திருப்பூர் மாவட்டம் குட்டகம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 19). இவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அவருக்கும், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். போலீசார் அவர்களை பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த வாரத்துக்கு முன்பு மீண்டும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு பின்னர் குற்றாலத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். கடந்த 3–ந் தேதி இரவு விடுதி அறையில் கார்த்திக் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கார்த்திக்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாவில் மர்மம்

இந்த நிலையில் கார்த்திக்ராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது காதலியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், “கார்த்திக்ராஜா மரணம் குறித்து மாலை 4 மணி அளவில் விடுதி மேலாளரான ராஜபாளையம் பகுதியை சேர்ந்த செய்யது ஜலாலுதீன் (70) மற்றும் விடுதி பணியாளரான சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (35) ஆகிய இருவரிடம் அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் அந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர் இரவு 9 மணி அளவில்தான் இச்சம்பவம் பற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து கார்த்திக்ராஜாவின் காதலி கொடுத்த புகாரின்பேரில் விடுதி மேலாளர் செய்யது ஜலாலுதீன், பணியாளர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும், கார்த்திக்ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் கார்த்திக்ராஜா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதற்கான உண்மை நிலவரம் தெரியவரும்“ என்றனர்.


Next Story