அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:30 AM IST (Updated: 5 Feb 2019 9:21 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் ஊரக புறக்கடைக் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 800 பயனாளிகளுக்கு நாட்டு கோழிகுஞ்சுகள் வழங்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,


தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் வாழும் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடைபராமரிப்புத்துறையின் சார்பில் ‘அசில் நாட்டின கோழிக்குஞ்சுகள்“ வழங்கும் திட்டத்தை சமீபத்தில் முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி தாந்தோன்றிமலையிலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் 800 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான ‘‘அசில் நாட்டின கோழிக்குஞ்சுகளை“ வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.


பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஏழை பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம், வளர் இளம் பெண்களுக்கான சத்தான உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம், படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற ஏழை பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ‘ஊரக புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டம்“ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் முதற்கட்டமாக தலா 200 பயனாளிகள் வீதம் 1,600 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ரூ.3,750 மதிப்பிலான 50 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகளும், அவற்றை பாதுகாப்பாக பராமரிக்க ரூ.2,500 மதிப்பிலான கூண்டும் தரப்படுகின்றது.


அதுமட்டுமல்லாது, இந்தக்கோழியினை எவ்வாறு முறையாக வளர்ப்பது என்பது குறித்து விளக்கும் வகையில் அந்தந்தப்பகுதி கால்நடை மருத்துவர்களால் ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்படும். இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.150 ஊக்கத்தொகையும், விளக்க கையேடும் வழங்கப்படும். தற்போது முதற்கட்டமாக கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர், குளித்தலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான பயனாளிகளுக்கு வழங்க அசில் நாட்டுக்கோழிக்குஞ்சுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூரியபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் எஸ்.கோபால்சுவாமி, உதவி இயக்குனர்கள் நடராஜன், முரளிதரன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story