பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலில் மணி விழா கொண்டாடிய ஐஸ்லாந்து ‘அன்னபூரணி’ கிராம மக்கள் வாழ்த்து


பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலில் மணி விழா கொண்டாடிய ஐஸ்லாந்து ‘அன்னபூரணி’ கிராம மக்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Feb 2019 4:00 AM IST (Updated: 6 Feb 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே கொற்கை கிராமத்தில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலில் ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த ‘அன்னபூரணி’ மணி விழா கொண்டாடினார். அப்போது அவருக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கும்பகோணம்,

அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, ஐஸ்லாந்து, இத்தாலி, துபாய், கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்குரிய கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்மிக யாத்திரையை கடந்த மாதம் (ஜனவரி) 17-ந் தேதி தொடங்கினர்.

இவர்கள் நேற்று அவிட்ட நட்சத்திரத்துக்குரிய கோவிலான கும்பகோணம் அருகே கொற்கை கிராமத்தில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அப்போது ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த அனா என்கிற அன்னபூரணி என்ற பெண்ணுக்கு 60 வயது பூர்த்தியானதையொட்டி மணி விழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. 51 கலச பூஜையும் 11 வேதவிற்பன்னர்கள் மூலமாக நடைபெற்றது. இதில் கொற்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு, மணி விழா கொண்டாடிய அன்னபூரணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நட்சத்திர யாத்திரை குழுவை வழிநடத்தும் பார்த்திபன் கூறியதாவது:-

27 நட்சத்திரங்களுக்குரிய கோவில்களுக்கு செல்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். இதுவரை காஞ்சீபுரம், மதுரை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 23 கோவில் களில் சாமி தரிசனம் செய்து விட்டு 24-வதாக கொற்கையில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

இந்த குழுவில் உள்ள ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த அன்னபூரணிக்கு இன்று (நேற்று) 60 வயது முடிவடைவதால், அவருக்கு மணிவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த அன்னபூரணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஆன்மிக யாத்திரை வருகிற 8-ந் தேதி முடிவடைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story