பிரமாண்ட பெருமாள் சிலை குறித்து ‘வாட்ஸ்-அப்பில்’ அவதூறு - 7 பேர் கைது


பிரமாண்ட பெருமாள் சிலை குறித்து ‘வாட்ஸ்-அப்பில்’ அவதூறு - 7 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படும் பெருமாள் சிலை குறித்து அவதூறாக ‘வாட்ஸ் -அப்பில்’ கருத்துக்களை பதிவிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாலகுறி பாரத கோவில் அருகில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து நழுவ முயன்றனர். இதனால் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கி பிரமாண்ட பெருமாள் சிலையை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும், இதற்காக போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக அவர்கள் ‘வாட்ஸ் அப்பில்’ பெருமாள் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை பரப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறியைச் சேர்ந்த மகேஷ்குமார் (வயது29), மேலுமலை அருகே உள்ள பி.ஜி.துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (25), சந்தோஷ்குமார் (25), பிரதீப்குமார் (22), கோவிந்தராஜ் (22), மற்றொரு கோவிந்தராஜ் (27), மகேந்திரன் (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story