முல்லைப்பெரியாறு அணைக்கு சென்ற தமிழக பொதுப்பணித்துறை ஆய்வுக் குழுவுக்கு அனுமதி மறுப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு தல ஆய்வு பயிற்சிக்காக சென்ற தமிழக பொதுப்பணித்துறை குழுவினருக்கு கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
தேனி,
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பெரியாறு- வைகை வடிநில பகுதிகளில் தல ஆய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 27 பேர் கொண்ட குழுவினர் இடுக்கி அணை, முல்லைப்பெரியாறு அணை, வைகை அணை மற்றும் லோயர்கேம்ப் முதல் ராமநாதபுரம் வரையிலான கால்வாய், ஆறுகள் போன்ற பகுதிகளில் நேரில் தல ஆய்வு செய்து பயிற்சி பெற உள்ளனர்.
இதற்காக இந்த குழுவினர் நேற்று காலை கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள இடுக்கி அணைக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து முல்லைப்பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி வந்தனர். அவர்களுடன் முல்லைப்பெரியாறு அணையின் உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின் மற்றும் பொறியாளர்கள் சிலரும் வந்தனர்.
தேக்கடி ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில், இந்த குழுவினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி அவர்களை அணைக்கு செல்ல அனுமதி மறுத்தனர். அப்போது கேரள வனத்துறை இணை இயக்குனர் ஷில்பா அங்கு வந்தார். அவரும், அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு வந்த தமிழக குழுவினர் மாலை 4.30 மணி வரை அங்கேயே அனுமதிக்காக காத்திருந்தனர். இறுதி வரை அனுமதி கொடுக்காமல், திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அந்த குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வினிடம் கேட்ட போது, ‘பெரியாறு-வைகை வடிநில பகுதிகளில் தல ஆய்வு பயிற்சிக்காக தமிழக பொதுப்பணித்துறை குழுவினர் அழைத்து வரப்பட்டனர். காலையில் இடுக்கி அணையை பார்த்துவிட்டு, முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட வந்த போது கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட அனுமதிக்காக கேரள வனத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்து இருந்தோம். ஆனால், அனுமதி கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் அணைக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து மதகில் இருந்து மின்உற்பத்தி நிலையத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் உள்ள போர்பை அணை, மின் உற்பத்தி நிலையம், கால்வாய் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வைகை அணை உள்ளிட்ட பிற பகுதிகளை பார்வையிட உள்ளனர்’ என்றார்.
அணைக்கு செல்ல முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ‘அணைக்கு அப்படி ஒரு குழுவினர் செல்ல திட்டமிட்டது குறித்த விவரம் எனக்கு தெரியாது. அனுமதி மறுக்கப்பட்ட விவரம் எனக்கு தெரியாது. எனது கவனத்துக்கு அப்படி எந்த பிரச்சினையும் கொண்டு வரப்படவில்லை’ என்றார்.
Related Tags :
Next Story