காவிரி ஆற்றில் மிதந்த முதலையின் உடல் கொன்று உடல் பாகங்களை அகற்றியது யார்? வனத்துறையினர் விசாரணை


காவிரி ஆற்றில் மிதந்த முதலையின் உடல் கொன்று உடல் பாகங்களை அகற்றியது யார்? வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உடல் பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் முதலையின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது. அதனை யாரேனும் கொன்றார்களா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைக்கோட்டை,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலசிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றின் காந்தி படித்துறை அருகில் சேட்டுத்தோப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் காவிரி ஆற்றின் உள்ளே சுமார் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஆற்றில் மிதந்த முதலையை கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பார்த்தபோது, முதலையின் உடலில் முன் பகுதியின் ஒருகால் மற்றும் தலை, உடல் பகுதியில் உள்ள சதைப்பகுதிகள் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில் இருந்தது.

இதையடுத்து வனத்துறை யினர் கால்நடை மருத்துவ குழுவினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, பரிசோதனைக்காக முதலை உடலில் ஒரு சில பாகங்களை எடுத்துக்கொண்டு மற்ற பாகங்களை அதே பகுதியில் குழிதோண்டி புதைத்துவிட்டு சென்றுவிட்டனர். மேலும் இந்த முதலையை யாரேனும் கொன்று உடல் பாகங்களை அகற்றினார்களா? அல்லது நீர்நாய் போன்றவையால் முதலை கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து கோட்டை போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story