நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2019 5:30 AM IST (Updated: 6 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு,

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ஈரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகம், புதுச்சேரி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, தனித்தனியாக போட்டியிட்டாலும் சரி தோல்வி அடைவது உறுதி. தமிழகத்தில் இந்த 2 கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது. பிரதமர் நரேந்திரமோடி கவுந்தப்பாடியில் கூட்டம் நடத்தினாலும் சரி, மொடக்குறிச்சியில் பிரசாரம் செய்தாலும் சரி கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். அவர் மூத்த தலைவர். காமராஜர் காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். திருநாவுக்கரசரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. தான் 2½ ஆண்டுகாலம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தது சாதனை என்று அவரே, கூறியுள்ளார்.

மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி அரசியல் ஆதாயத்திற்காக சி.பி.ஐ.யை ஏவி அடக்கு முறையை கையாண்டு வருகிறார்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

அப்போது அவருடன் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், விவேகானந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாட்ஷா உள்பட பலர் இருந்தனர்.


Next Story